பாட்னா,
பீகார் மாநில முன்னாள் முதல்மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம், லாலு பிரசாத்துக்கு வழங்கப்பட்டு இருந்த இசட் பிளஸ் பாதுகாப்பை திரும்ப பெறுவது என முடிவு செய்தது. அதற்கு பதிலாக இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு லாலு பிரசாத்தின் மகன்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும் லாலுவின் மூத்த மகனும், மாநில முன்னாள் மந்திரியுமான தேஜ் பிரதாப் யாதவ், பிரதமர் மோடியின் தோலை உரிப்போம் என கோபாவேசமாக கூறினார். லாலுவுக்கு எதிராக மத்திய அரசு கொலைச்சதியில் ஈடுபட்டு உள்ளதாக கூறிய அவர், தனது தந்தை கொல்லப்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? எனவும் கேள்வி எழுப்பினார்.