பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதில் ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. தனது ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற்றுவிட்டார். மற்ற 15 எம்.எல்.ஏ.க்களும் எக்காரணம் கொண்டும் ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டனர்.
இதனால் முதல்-மந்திரி குமாரசாமி கடந்த 18ந்தேதி தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் சட்ட சபையில் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த 19ந்தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய்வாலா உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை குமாரசாமி புறக்கணித்தார்.
இதற்கிடையே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் அரசு விடுமுறைக்கு பிறகு நேற்று காலை சட்டசபை கூடியது. இதில் சபாநாயகர், நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் முடிந்த பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறினார்.
இதற்கிடையே ராஜினாமா செய்துள்ள 15 எம்.எல்.ஏ.க் களை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் காங்கிரஸ் மனு வழங்கியுள்ளது. கொறடா உத்தரவு பிறப்பித்தும் அந்த 15 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமடள்ளி, பிரதாப்கவுடா பட்டீல், பி.சி.பட்டீல், சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா, சுதாகர், எம்.டி.பி.நாகராஜ் ஆகியோருக்கு சபாநாயகர் நேற்று நோட்டீசு அனுப்பி இன்று நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் உங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி சபாநாயகர் கேட்டுள்ளார்.
இந்த நிலையில், நேரில் ஆஜராகி விளக்கம் தர 4 வாரங்கள் அவகாசம் தேவை என மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக சட்டமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.