தேசிய செய்திகள்

‘உத்தர பிரதேசத்தைப் போல் பீகாரிலும் ரவுடிகளின் வீடுகள் புல்டோசரால் தகர்க்கப்படும்’ - யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேசத்தில் ரவுடிகளின் சொத்துகள், ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சமஸ்திபூர்,

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் 'மகாகத்பந்தன்' கூட்டணி ஆகிய 2 கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி(ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் ' மகாகத்பந்தன்' கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சியினர் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமஸ்திபூர் பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ராஷ்டிரீய ஜனதாதளம் ஆட்சியில் இருந்தபோது, இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டன. ஏழைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டன. காட்டாட்சி கொண்டுவரப்பட்டது. நிதிஷ்குமார் வந்த பிறகுதான் நல்லாட்சி சகாப்தம் தொடங்கியது.

ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., எய்ம்ஸ்., மருத்துவ கல்லூரிகள் ஆகியவையும் துறைமுகங்களும் கட்டப்பட்டன. அதன்மூலம், விவசாய விளைபொருட்கள் சர்வதேச சந்தைகளை அடைந்தன.

உத்தர பிரதேசத்தில் ரவுடிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. அவர்களின் சொத்துகள், ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. பீகாரிலும் அதே நடவடிக்கையை பார்க்கப் போகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து