2019 தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இன்று பிரதமர் மோடி திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் 'மிஷன் சக்தி' எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்ததற்கு இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓவுக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய பணியால் மிகவும் பெருமையடைகிறோம்... பிரதமருக்கு உலக நாடக தின வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், வேலைவாய்ப்பு பிரச்சனை, கிராமப்புற பிரச்சனைகள், பெண்கள் பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் இருந்து நாட்டு மக்களை திசைத்திருப்ப வானத்தை நோக்கி பிரதமர் மோடி கையை காட்டியுள்ளார். இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இஸ்ரோவிற்கு வாழ்த்துக்கள், இந்த வெற்றி உங்களுக்கானது. இந்தியாவை பாதுகாப்பான நாடாக உருவாக்குகிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.
மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட் செய்திகளில், இந்தியாவின் விண்வெளிதிட்டம் எப்போதும் உலக தரம் வாய்ந்ததாக பல ஆண்டுகளாக இருக்கிறது. இந்திய விஞ்ஞானிகள், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிற ஆய்வு நிறுவனங்களால் நாம் பெருமையடைகிறோம். விண்வெளி ஆய்வு மற்றும் மேம்பாடு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி வழக்கம்போல எல்லாவற்றுக்கும்தான் தான் என பாராட்டை தனதாக்குகிறார். உண்மையில் பாராட்டு நம்முடைய ஆராய்ச்சியாளர்களுக்குதான். இன்றைய அறிவிப்பு ஒரு வரம்பற்ற நாடகமாகும், இப்போது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டு தனக்கும், தனது அரசுக்கும் மகுடம் சூட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார். இது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும். இந்த அரசாங்கம் காலாவதியாகி விட்டது.
இந்த நிலையில் இப்படியொரு அறிவிப்பை வெளியிட வேண்டிய அவசரமும் கிடையாது. இது மூழ்கிக் கொண்டிருக்கும் பா.ஜனதா என்னும் கப்பலுக்கு ஆக்ஸிஜன் செலுத்தும் அவசரமாகவே தெரிகிறது. தேர்தல் ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் தெரிவிக்க இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.