லக்னோ,
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய மந்திரி உமாபாரதி உள்ளிட்ட 12 தலைவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தவேண்டும் என்றும், இந்த வழக்கை லக்னோ சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு அன்றாட அடிப்படையில் விசாரித்து 2 வருடங்களுக்குள் முடிக்கவேண்டும் எனவும் அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து லக்னோவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் கடந்த 30-ந் தேதி அத்வானி உள்ளிட்ட 12 தலைவர்கள் மீதும் சி.பி.ஐ. குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. அவர்கள் பாபர் மசூதியை இடிப்பதற்கு கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக அதில் கூறப்பட்டு இருந்தது.
விலக்கு அளிக்க கோரிக்கை
இதனால் அத்வானியும், மற்ற தலைவர்களும் வழக்கு விசாரணைக்காக அன்றாடம் லக்னோ சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜராகவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் பா.ஜனதாவின் மூத்த தலைவர்கள் சார்பில் அவர்களது வக்கீல்கள், சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனுதாக்கல் செய்தனர். அதில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் உமாபாரதி மத்திய மந்திரியாக பதவி வகிப்பதால் அவருடைய பணியின் முக்கியத்துவம் கருதியும், மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் வயது மூப்பை கருத்தில் கொண்டும் அன்றாட வழக்கு விசாரணையில் ஆஜர் ஆவதில் இருந்து மூவருக்கும் விலக்கு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
கோர்ட்டு அனுமதி
இந்த மனு நேற்று சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மனுதாரர்களின் வேண்டுகோளை ஏற்று மூவரும் அன்றாட வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளிப்பதாக நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் கூறினார்.
அதே நேரம் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கூட்டு சதியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் வழக்கின் முக்கியத்துவம் கருதி தேவைப்படும் நேரத்தில் மூவரும் கோர்ட்டில் ஆஜராகவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.