மும்பை,
தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் மும்பையில் ஊரடங்கு போடப்படும் என மேயர் கிஷோரி பெட்னேக்கர் கூறினார்.
மும்பையில் ஆட்கொல்லி காரோனா வரஸ் வேகமாக பரவி வருகிறது. நகரில் கடந்த ஞாயிறு, நேற்று முன் தினம் பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டி இருந்தது. நோய் தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது மக்கள் பூங்கா, கடற்கரை, மைதானம் போன்ற இடங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மும்பையில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மேயர் கிஷோரி பெட்னேக்கர் கூறியுள்ளார். ஊரடங்கை விரும்பவில்லை
இதுகுறித்து அவர் கூறியதாவது:- மும்பையில் தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் ஊரடங்கு தேவைப்படும். இதை நான் கூறவில்லை. அரசின் விதிகள்படி ஒருநாளில் தொற்று பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டினால் ஊரடங்கு தேவைப்படும். ஆனால் அதுபோன்ற நிலை நகருக்கு வரவிடமாட்டோம். இன்றும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் முடியவில்லை.
நாம் யாரும் இங்கு ஊரடங்கை விரும்பவில்லை. எனினும் நோய் தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அப்போது ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய தேவை இருக்காது. அரசால் ஒவ்வாருவரின் பின்னாலும் செல்ல முடியாது. எனவே மக்கள் தாங்களாக நெறிமுறைகளை பின்பற்றினால் வைரஸ் பரவல் கட்டுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.