புதுடெல்லி,
கடந்த ஜூலை 17 ஆம் தேதி துவங்கிய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று நிறைவு பெற்றது. இதையடுத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. மக்களவையில் 19 அமர்வுகள் கூடியுள்ளன. 71 மணி நேரம் அவை நடவடிக்கைகள் நீடித்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் 17 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு 14 நிறைவேற்றப்பட்டுள்ளன. அமளி காரணமாக 30 மணிநேரங்கள் வீணடிக்கப்பட்டுள்ளது. பொது முக்கியத்துவம் கருதி கூடுதலாக 10 மணி நேரங்கள் அவை நடவடிக்கை நடைபெற்று இருப்பதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.
மாநிலங்களவையை பொறுத்தவரை, மழைக்கால கூட்டத்தொடரில் 9 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் நாட்டில் நிலவிய பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்த விவாதம் நடைபெற்றுள்ளது. அவையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, 19 அமர்வுகளில் 80 மணி நேரத்திற்கும் மேலாக அவை நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளது. 25 மணி நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது என்றார்.