புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசார பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுச்சேரியின் காரைக்காலில் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.
அவர் பேசும்பொழுது, மீனவர்களுக்காக மோடி அரசு ஏன் தனி துறை ஒன்றை உருவாக்கவில்லை என சில நாட்களுக்கு முன் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். மீனவர்களுக்காக நரேந்திர மோடிஜி தனி அமைச்சகம் ஒன்றை முன்பே உருவாக்கி விட்டார். 2 ஆண்டுகளுக்கு முன்பே (கடந்த 2019ம் ஆண்டு) மத்திய மீன்வளத்துறை உருவாக்கப்பட்டது.
இதுபற்றி ராகுல் காந்தி அறிந்திருக்கவில்லை. அப்போது நீங்கள் விடுமுறையில் இருந்தீர்கள் என்று அமித்ஷா கிண்டலாக கூறினார். மக்களவையில் 4 முறை எம்.பி.யாக இருந்த கட்சியின் தலைவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் மீன்வள துறை உருவாக்கப்பட்டது கூட தெரியவில்லை.
அந்த கட்சி புதுச்சேரியின் நலன்களை கவனத்தில் கொள்ளுமா? என புதுச்சேரி மக்களை நோக்கி நான் கேட்க விரும்புகிறேன் என்று அமித்ஷா கூறினார். மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரிக்காக அளிக்கப்பட்ட ரூ.15 ஆயிரம் கோடி நிதியை முன்னாள் முதல் மந்திரி நாராயணசாமி காந்தி குடும்பத்திற்கு அளித்துள்ளார் என்றும் அமித்ஷா குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.