லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியுமான திக்விஜய சிங், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை தள்ளி வைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது நல்ல நேரம் அல்ல என்பதையும் பலரும் தெரிவிக்கின்றனர். அயோத்தி கோவில் தொடர்புடைய பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.
உத்தர பிரதேச மந்திரி, மாநில பா.ஜ.க தலைவர், அயோத்தி ராமர் கோவில் பூசாரிகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் பிரதமர் மோடியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அப்படி இருக்கும் பட்சத்தில் பிரதமர் மோடியும், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டாமா? 14 நாட்கள் தனிமைப்படுத்தல் என்பது சராசரி மனிதருக்கு மட்டும் தானா?.
ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தக்கூடாது என நாங்கள் கூறவில்லை. இந்த நேரத்தில் அதை நடத்த வேண்டாம் என்று தான் வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.