தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று; உடல்நிலையில் மேலும் பின்னடைவு

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உடல்நிலை மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த 10-ந்தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூளையில் சிறிய கட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அதை அகற்ற ஆபரேஷன் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் கோமா நிலையை அடைந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டது. பல்வேறு இணை நோய்களும் இருப்பதால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இந்நிலையில், பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவ குழுவினர் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள். அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகனும், முன்னாள் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி, காலையில், தனது டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார். அவர் கூறியிருந்ததாவது:-

அனைவரின் நல்வாழ்த்துகளாலும், டாக்டர்களின் தீவிர முயற்சியாலும், என் தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. முன்னேற்றத்துக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அவர் விரைந்து குணமடைய எல்லோரும் வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...