பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை 
தேசிய செய்திகள்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை; வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பரப்பன அக்ரஹாரா சிறை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகள் சட்டவிரோதமாக செல்போன், கஞ்சா, சிகரெட் பயன்படுத்துவதாக ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளில் அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி, கைதிகளிடம் இருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், பீடி, சிகரெட் பாக்கெட்டுகள், கஞ்சா மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

குறிப்பாக பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா குற்றச்சாட்டு கூறி இருந்தார். மேலும் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. சத்திய நாராயணா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொகுசு வாழ்க்கை

இந்த நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சாதாரண கைதிகள் கூட சிறையில் தனி அறையில் டி.வி, மெத்தை, மின்விசிறி, தாங்களாகவே சமைத்து சாப்பிடுவதற்கு கியாஸ் அடுப்புகளை பயன்படுத்தும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர கைதிகள் சர்வ சாதாரணமாக செல்போன், சிகரெட், பீடி பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைதிகள் சொகுசு வசதியை அனுபவிக்க, சிறை வார்டன்களுக்கு கட்டுக்கட்டாக பணம் கொடுக்கும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக சிறையில் கைதிகள் மதுபானம் அருந்தும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. அதாவது சிறைக்கு புதிதாக வரும் கைதிகளுக்கு, ஏற்கனவே பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகள் அறைகள் கொடுக்காமலும், உணவு கொடுக்காமலும் தொல்லை கொடுப்பதாக கூறப்படுகிறது.

சமைத்து சாப்பிடும் கைதிகள்

இதனால் பல ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் ரவுடி கைதிகளின் தொல்லை காரணமாக, சாதாரண கைதிகள் சிறை வார்டன்களிடம் பணத்தை கொடுத்து தங்களுக்கு என்று தனி அறையை பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது. அந்த அறையில் டி.வி, மின்விசிறி, கட்டில், மெத்தை, கியாஸ் அடுப்பு பயன்படுத்துவதற்கு தனித்தனியாக சிறை வார்டன்களுக்கு லஞ்சம் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதுபோல, செல்போன் பயன்படுத்தும் கைதிகள் மாதம் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக கைதிகளுக்கு சிறையில் 3 நேரமும் உணவு வழங்கினாலும், சில கைதிகள் தங்களது அறையிலேயே சமைத்து சாப்பிடுவதாக கூறப்படுகிறது. இதற்கு தேவையான பொருட்களை, சிறையிலேயே 3 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவதற்கும் வசதிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த முறைகேட்டில் ரவுடி கைதிகளுக்கும், சிறை வார்டன்களுக்கும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பரப்பனஅக்ரஹாரா சிறையில் தொடந்து நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட வார்டன்கள், அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனா.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்