புதுடெல்லி
ஜார்க்கண்ட மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரர்களாக சந்தேகிக்கப்படும் ஏழு பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைப் பற்றி பிரதமர் மோடி ஏன் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை எனக் கேட்டுள்ளது எதிர்க்கட்சியான காங்கிரஸ். கட்சியின் அகில இந்தியத் துணைத் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட் ஒன்றில் மோடியை நோக்கி இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் காணப்படும் சட்டமின்மை மற்றும் குழப்பங்களுக்கு மற்ற கட்சியினரின் கொள்கைகளும், பார்வைகளும் குறிவைக்கப்படுவதும் காரணம் என்று கூறியுள்ளது காங்கிரஸ். மோடி கூறி வந்த புதிய இந்தியா இதுதானா என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. மோடி கூறிய புதிய இயல்பு இதுதானா என்றும் அக்கட்சி கேட்டுள்ளது. பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கு கெட்டுக்கிடக்கிறது. பசு பாதுகாப்பு படை எனும் பெயரில் பலரை அடித்து துன்புறுத்திய போது எடுத்தப்படங்களையும் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி காட்டினார்.
இது போன்ற செயல்கள் மாநில அரசுகளின் துணையோடு நடக்கின்றனவோ என்கிற சந்தேகமும் எழுகிறது. ஏனெனில் மாநிலக் காவல்துறையினர் இக்காட்சிகளைக் கண்டு மௌனம் காக்கின்றனர். கடந்த 2013 ஆம் ஆண்டில் 39,408 ஆக இருந்த தலித்துகளுக்கு எதிரான வன்முறை 2015 ஆம் ஆண்டில் 54,355 ஆக உயர்ந்து விட்டது என்று தேசிய குற்றப்பதிவு ஆவணகத்தின் தரவுகள் தெரிவிப்பதாக சிங்வி கூறினார்.