மும்பை,
மும்பையில் உலக பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியில் 27 மாடி ஆடம்பர வீட்டின் அருகே கடந்த மாதம் வெடிகுண்டு கார் மீட்கப்பட்டது. இந்தநிலையில் வெடிகுண்டு காரின் உரிமையாளர் என கூறப்பட்ட தானேயை சேர்ந்த ஹிரன் மன்சுக் கொலை செய்யப்பட்டு கழிமுக கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.
இதில் வெடிகுண்டு கார் வழக்கில் மும்பை போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேவை தேசிய புலனாய்வு முகமை கைது செய்ததை அடுத்து மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் ஊர்காவல் படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். கமிஷனருக்கு கீழ் பணியாற்றி போலீஸ் அதிகாரிகள் மன்னிக்க முடியாத தவறை செய்ததால் பரம்பீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியிருந்தார்.
இந்தநிலையில் மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு மராட்டிய அரசியலை புரட்டி போடும் அளவுக்கு வெடிகுண்டு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கைதான போலீஸ் அதிகாரி சச்சின் வாசே மூலமாக மும்பை போலீசாரை மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தருமாறு கூறினார் என்ற திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
ஆனால், வெடிகுண்டு கார் வழக்கில் இருந்து தப்பிக்க முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்து இருப்பதாக உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் மறுப்பு தெரிவித்து உள்ளார். மராட்டிய அரசியலில் இந்த விவகாரம் அனலை கிளப்பியுள்ளது. உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க வேண்டியது முதல் மந்திரிதான் என்றார். மேலும், அனில் தேஷ்முக் விவகாரம் குறித்து ஆலோசிக்க மராட்டியத்தில் ஆளும் மகாவிகாஸ் கூட்டணி தலைவர் நாளை சந்திக்க உள்ளதாக ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.