தேசிய செய்திகள்

போலீசார் மூலம் பணம் வசூலிப்பதே மராட்டிய அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டம் - பிரகாஷ் ஜவடேகர் கடும் விமர்சனம்

போலீசார் மூலம் பணம் வசூலிப்பதே மராட்டிய அரசின் குறைந்தபட்ச பொது செயல்திட்டமாக உள்ளது என பாஜக மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிபொருட்கள் நிரப்பிய கார் நின்று கொண்டிருந்தது. இதுபற்றிய விசாரணை நடந்து வந்த நிலையில், காரின் உரிமையாளர் மர்மமான முறையில் இறந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக குற்ற புலனாய்வுத்துறை சப்-இன்ஸ்பெக்டர் சச்சின் வாசை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கைது செய்தது. பின்னர், அவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதுபோல், இந்த விவகாரத்தை சரியாக கையாள தவறியதாக, மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் போலீசார் செய்த மன்னிக்க முடியாத குற்றத்துக்காக மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் இடமாற்றம் செய்யப்பட்டதாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியிருந்தார்.

இதற்கிடையே, பரம்பீர் சிங், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், மும்பை நடன விடுதி, மதுபான விடுதிகளில் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலித்து தருமாறு எனக்கு உத்தரவிட்டார். நான் மறுத்து விட்டதால், கீழ்நிலை அதிகாரிகள் மூலம் பணம் வசூலித்தார். தற்போது வெடிகுண்டு கார் பிரச்சினையை பயன்படுத்தி என் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று பரம்பீர் சிங் கூறியுள்ளா.

இந்த கடிதம் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்மந்திரியாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். அவரது அமைச்சரவையில் மாநில உள்துறை மந்திரியாக உள்ள

அனில் தேஷ்முக், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இதனால், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியான பாஜக, உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், மராட்டியத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்து வருகிறது.

இதற்கிடையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மந்திரி அனில் தேஷ்முக் மீது போலீஸ் அதிகாரி பரம்பீர் சிங் கூறும் மாமூல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. சில போலீஸ் அதிகாரிகளை நேரில் அழைத்து கட்டாயப்படுத்தியதாக பரம்பீர் சிங் கூறும் நாட்களில், மந்திரி

அனில் தேஷ்முக் மருத்துவமனையில் இருந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக பிப்ரவரி 5-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அவரது சொந்த ஊரான நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் 27-ந் தேதி வரை நாக்பூரில் அவர் வீட்டு தனிமையில் இருந்தார். எனவே அந்த 3 வார காலங்கள் அவர் மும்பையிலேயே இல்லை. உண்மை நிலவரம் இப்படி இருக்கும் போது பரம்பீர் சிங் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. எனவே மந்திரி அனில் தேஷ்முக் ராஜினாமா செய்யும் கேள்விக்கே இடமில்லை என்றார்.

இந்நிலையில், பரம்பீர் சிங் தொடர்பான விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் இன்று கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எல்லா கூட்டணிக்கும் குறைந்தபட்ச பொது செயல்திட்டம் என ஒன்று உள்ளது. மகாராஷ்டிர அரசின் (சிவசேனா,காங்கிரஸ், தேசியவாத கூட்டணி அரசு) குறைந்தபட்ச பொது செயல்திட்டம் என்பது போலீசார் மூலம் பணம் வசூலிப்பதாகும். இது மக்களின் நலனுக்கானது அல்ல. விவரிக்க முடியாத செயலுக்கு சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ் தலைவர்) ஆதரவு அளிக்கிறார் என்றார்.