மும்பை,
நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பதிக்கப்பட்டு உள்ள மாநிலம் மராட்டியமாகும். குறிப்பாக கொரோனா 2-வது அலை மராட்டியத்தை புரட்டி போட்டது. ஆக்சிஜன், மருந்து பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடுகளால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.
இந்தநிலையில் 3-வது அலையால் 5 லட்சம் குழந்தைகள் உள்பட 50 லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மந்திரி ராஜேந்திர சிங்கே அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
புல்தானாவில் நிருபர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது:-
கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும் சமயத்தில் மாநிலம் முழுவதும் 8 லட்சம் பேர் சிகிச்சையில் இருக்க வாய்ப்புள்ளது. சுமார் 5 லட்சம் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாவார்கள். இதில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் இந்த வாரம் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மராட்டிய அரசு சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலமும், போதுமான மருந்துகளை இருப்பில் வைப்பதின் மூலமும், குழந்தை மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை தயாராக வைப்பத்தின் மூலமாகவும் 3-வது அலையை எதிர்கொள்ள தாயாராகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.