கொரோனா தடுப்பூசி
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் பரவி வருகிறது. மாநிலத்தில் தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் இல்லாத அளவில் நேற்று முன்தினம் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது. தகுதி உள்ளவர்கள் ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர்.மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கடந்த வியாழன் வரை 36 லட்சத்து 39 ஆயிரத்து 989 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
2-வது இடம்
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதில் மராட்டியம் நாட்டில் 2-வது இடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதில் மராட்டியம் தேசிய அளவில் 2-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் நமக்கு முன்னால் உள்ளது. தடுப்பு மருந்து குறைந்த அளவில் தான் மாநிலத்தில் வீணாகி உள்ளது. சில மாநிலங்களில் அது 20 சதவீதம் வரை இருக்கும் போது, மாநிலத்தில் அது 6 சதவீதமாக உள்ளது. தடுப்பு மருந்து வீணாவதை பூஜ்ஜியம் சதவீதமாக்க முயற்சி செய்து வருகிறோம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.