புதுடெல்லி,
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் உள்ளூர் காங்கிரசார் போராட்டம் நடத்திய நிலையில், கட்சியின் தேசிய தலைவர்கள் பெரும்பாலும் போராட்டங்களில் பங்கேற்காமல் இருந்தனர். தற்போது அவர்களும் நேற்று குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கினர்.
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் ஒற்றுமைக்கான சத்தியாகிரகம் என்ற பெயரில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொதுச்செயலாளர் பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவர்களும், ஏராளமான தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின் போது சோனியா, ராகுல், மன்மோகன் சிங் ஆகியோர் அரசியல் சாசனத்தின் முன்னுரையை வாசித்தனர். மேலும் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்காகவும் போராட்டக்காரர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மவுனம் அனுசரித்தனர்.
இதைப்போல போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களும், தொண்டர்களும் நீளமான தேசியக்கொடியின் நிழலில் அமர்ந்து கொண்டு அரசியல் சாசன முன்னுரையை படித்தனர். இதில் மதத்தலைவர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
சத்தியாகிரக போராட்டத்தின் போது பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி வெறுப்புணர்வை பரப்பி நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும், ஆனால் அரசியல் சட்டத்தை சீர்குலைப்பதையும், பாரத மாதாவின் குரலை ஒடுக்க முயற்சிப்பதையும் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள் என்றும் கூறினார்.
இந்தியாவின் முன்னேற்றத்தை தடுக்க வேண்டும் என்ற எதிரிகளின் முயற்சி பலிக்கவில்லை என்றும், ஆனால் அவர்களால் முடியாததை இப்போது மோடி செய்து கொண்டிருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இளைஞர்களுக்கு வேலை வழங்க முடியாத மோடி, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார் என்றும் அவர் குறை கூறினார்.
இந்த சத்தியாகிரகத்தில் பேசிய பிரியங்கா, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்களில் உயிர்நீத்தவர்களின் பெயரால், அரசியல் சாசனத்தை காக்க உறுதியேற்போம் என அழைப்பு விடுத்தார்.
இந்த போராட்டத்தில் பேசிய ராஜஸ்தான், மத்திய பிரதேச முதல்-மந்திரிகள் முறையே அசோக் கெலாட், கமல்நாத் ஆகியோர், தங்கள் மாநிலத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என உறுதிபட தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் சத்தீஸ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் சார்பில் பங்கேற்ற மந்திரி சிங் தியோவும், தங்கள் மாநிலத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது என கூறினார்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, அகமது படேல், குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா, திக்விஜய் சிங், முகுல் வாஸ்னிக், மீரா குமார் மற்றும் காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினர்கள், பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.