புதுடெல்லி,
கிழக்கு டெல்லியில் உள்ள ப்ரீத் விஹார் பகுதியில் மெட்ரோ மருத்துவமனை மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இன்று மாலை சுமார் 3.30 மணியளவில் இந்த மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற மாடி அறைகளுக்கும் பரவியது.
அங்கு உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்றுவந்த 84 பேரில் சிலருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு நொய்டா நகரில் உள்ள அம்மருத்துவமனையின் கிளை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு 12 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்துவந்த தீயணைப்பு படையினர் மாலை சுமார் 4.50 மணியளவில் தீயை முழுவதுமாக அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.