புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 29-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு உள்ளது.
கூட்டத்தொடரின் முதல் நாளான 29-ந்தேதியே இந்த கூட்டத்தை நடத்த திட்டமிட்டு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து உள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்களுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், 29-ந்தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நமக்கு மிகவும் முக்கியமானது. இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஒன்றை நான் நடத்துகிறேன். இது 29-ந்தேதி காலை 9.45 மணிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள எனது அறையில் நடைபெறும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் இணைந்து எழுப்புவதற்கு இந்த கூட்டம் பயனளிக்கும் எனக்கூறியுள்ள கார்கே, மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் வழங்கிய ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புக்கு நன்றியும் தெரிவித்து உள்ளார்.