கொல்கத்தா,
உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த தடுப்பூசி போட்டவர்களையே வெளிநாடுகள் தங்கள் நாடுகளுக்குள் அனுமதிக்கின்றன. ஆனால் கோவேக்சின் தடுப்பூசிக்கு இன்னும் அதன் ஒப்புதல் கிடைக்காததால், அதை போட்டவர்களின் வெளிநாடு பயணம் சிக்கலை சந்தித்து வருகிறது.
எனவே இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் பெறும் நடவடிக்கையில் பிரதமர் மோடி தலையிட்டு விரைவில் ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் தொடக்கத்தில் இருந்தே கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாகவும், தனியார் துறைகள் கூட கோவேக்சினை போட்டு வருவதாகவும் தனது கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தடுப்பூசி இன்னும் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெறாததால், இந்த தடுப்பூசி போட்ட மாணவர்கள் பலரின் வெளிநாடு பயணம் தடைபட்டுள்ளதாக கூறியுள்ள மம்தா பானர்ஜி, இதனால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் சர்வதேச பயணங்களில் எந்தவித சிரமும் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறும் அவர், பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.