கொல்கத்தா
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே நேற்று முன்தினம் கரையை கடந்தது.
புயல் கரை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது. யாஸ் புயல் ஒடிசா, மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
புயலுக்கு 4 பேர் பலியானார்கள். ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில், யாஷ் புயலால் மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். விமானம் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு புயல் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ஒடிசாவில் யாஸ் புயாலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டார்.
யாஸ் புயல் பாதிப்பு - நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் பிரதமர் மோடி அறிவித்தார்.வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விரைவில் மத்தியக்குழு அனுப்பப்படும் என கூறினார்.
ஒடிசாவுக்கு ரூ.500 கோடியும், மேற்குவங்காளம் மற்றும் ஜார்கண்ட்டுக்கு ரூ.500 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒடிசாவை தொடர்ந்து மேற்குவங்காளத்திலும் புயல்பாதிப்புகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
மேற்கு வங்காளத்தின் பூர்பா மெடினிபூரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.
பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை மதியம் 2:30 மணி முதல் 3:30 மணி வரை பாசிம் மெடினிபூர் மாவட்டம் கலைகுண்டாவில் திட்டமிடப்பட்டது. மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடிக்கும் முதல்வர் பானர்ஜிக்கும் இடையிலான முதல் நபர் சந்திப்பு இதுவாகும்.
யாஸ் சூறாவளியின் தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேற்கு வங்காள கவர்னர் ஜகதீப் தங்கர் ஆகியோருடன் மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 30 நிமிடங்கள் தாமதமாக வந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநில நிர்வாகத்துடன் திட்டமிடப்பட்டுள்ள சூறாவளி மறு ஆய்வுக் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை அழைக்க பிரதமர் அலுவலகம் எடுத்த முடிவால் மம்தா பானர்ஜி கோபமடைந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கவர்னர் தங்கர் தனது டுவிட்டரில்
பிரதமரின் மறுஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் முதல்வரும் அதிகாரிகளும் மாநில மற்றும் அதன் மக்களின் நலன்களுக்கு உதவியிருக்கும். முரண்பாடான நிலைப்பாடு அரசு அல்லது ஜனநாயகத்தின் நலன்களுக்கு உதவாது. முதல்வர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்காதது அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சிக்கு ஒத்ததாக இல்லை என கூறினார்
மறு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் முதல்வர் மம்தா பானர்ஜி கலாய்குண்டாவில் பிரதமரை 15 நிமிடம் தனியாக சந்தித்து மேற்குவங்காள நிலைமை குறித்து விளக்கினார். அப்போது அந்த அறையில் வேறு யாரும் இல்லை. அவர் மாநில அரசின் சூறாவளி சேத மதிப்பீட்டு அறிக்கையை பிரதமரிடம் ஒப்படைத்தார். மத்திய அரசிடம்மிருந்து ரூ .20,000 கோடி நிதியை கோரி உள்ளார்.
அதன்பிறகு, மேற்கு வங்காளத்தின் திகாவில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மறுஆய்வு செய்ய முதல்வர் மம்தா பானர்ஜி தலைமைச் செயலாளருடன் புறப்பட்டார்.
இது குறித்து மமதா பானர்ஜி கூறும் போது பிரதமர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார். எங்களுக்கு (அவரது அலுவலகம்) தெரியாது. நான் திகாவில் ஒரு கூட்டம் நடத்தினேன் , நான் கலைகுண்டாவுக்குச் சென்று 20,000 கோடி கேட்டு அறிக்கை கொடுத்தேன். நான் அவரிடம் மாநில அதிகாரிகளை சந்திக்க செல்வதாக கூறினேன். நான் அவருடைய அனுமதியை பெற்றுக் கொண்டு வெளியேறினேன், "என்று கூறினார்.
இது குறித்து மம்தா டுவிட்டரில் கூறி இருப்பதாவது;-
ஹிங்கல்கஞ்ச் & சாகரில் மறு ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு, கலாய்குண்டாவில் பிரதமரைச் சந்தித்தேன், மேற்குவங்காளத்தில் சூறாவளிக்குப் பிந்தைய நிலைமை குறித்து அவருக்கு விளக்கினேன். அவரது ஆய்வுக்காக புயல் சேத அறிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ளது. திகாவில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை மதிப்பாய்வு செய்ய நான் கிளம்பி விட்டேன் என அதில் கூறி உள்ளார்.