சிலிகுரி,
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கண்டித்து மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று சிலிகுரியில் பாதயாத்திரை நடத்தினார். டார்ஜிலிங் மோரேயில் தொடங்கிய இந்த பாதயாத்திரையில் திரிணாமுல் காங்கிரசார் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.
இந்த பாதயாத்திரையின்போது பலரும் கியாஸ் சிலிண்டர் வடிவ அட்டையை ஏந்திச்சென்றனர். பாத யாத்திரையில் மாநில மந்திரி சந்திரிமா பட்டாச்சாரியா, எம்.பி.க்கள் மிமி சக்ரவரத்தி, நுஸ்ரத் ஜகான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மம்தா குறிப்பிடுகையில், இனி கியாஸ் சிலிண்டர்கள் சாமானிய மனிதர்களுக்கு எட்டாக்கனியாகி விடும். நமது குரல்கள் கேட்கப்படுவதற்காக பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என கூறியது நினைவுகூரத்தக்கது.