கொல்கத்தா,
கேரளாவில் கடந்த மே மாதம் 29-ந் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை கடந்த 8-ந் தேதி முதல் தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும் இடைவிடாது பெய்து வரும் மழையால் மாநிலம் முழுவதும் வெள்ளநீரில் மிதக்கிறது. மழை, நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி தற்போது வரை 324 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 82,442 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளசேதம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களில், ரானுவப்படை, கடற்படை, விமானப்படை, இந்திய கடலோரப்படை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவை சேர்ந்த பல வீரர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேரள வெள்ளத்தை எதிர்த்து போராடுபவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் எனக் கூறியுள்ளார். இது குறித்து மம்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது. நீங்கள் ஒவ்வொருவரும் கேரளாவிலுள்ள நம் சகோதர, சகோதரிகளுக்காக பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். வெள்ளத்தினால் அன்பானவர்களை இழந்த அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். கேரள வெள்ளத்தை எதிர்த்து போராடுபவர்கள் வலிமையுடன் இருக்க வேண்டும் எனக் கூறினார்.