போபால்,
மத்தியபிரதேச மாநிலம் பிண்டு மாவட்டம் ஹிரியா தபக் கிராமத்தை சேர்ந்தவர் முனீஷ் தனுக். இவரது மகள் நிந்தி (வயது 21). இவருக்கும் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனிடையே, திருமணம் ஆவதற்கு முன்பு இருந்தே உறவுக்கார இளைஞருடன் நித்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. திருமணமான பின்னரும் உறவுக்கார இளைஞருடனான உறவை நித்து தொடர்ந்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்குமுன் கணவரை கைவிட்ட நித்து தனது காதலனுடன் சென்று குவாலியர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தா. அங்கு வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு அப்பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கணவரை கைவிட்டு நித்து காதலனுடன் சென்றதால் நித்துவின் தந்தை முனீஷ் மிகுந்த ஆத்திரத்தில் இருந்துள்ளார். அதேவேளை, மகள் நித்து குடியிருந்த இடம் குறித்து அறிந்த முனீஷ் கடந்த திங்கட்கிழமை அங்கு சென்று தன்னுடன் கிராமத்திற்கு வருமாறு கூறியுள்ளார். தந்தையின் பேச்சை கேட்ட நித்து தந்தையுடன் ஹிரியா தபக் கிராமத்திற்கு வந்துள்ளார்.
கிராமத்திற்கு வந்த நித்துவை தனியாக பேசவேண்டும் என கூறி தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து தான் மறைத்து கொண்டுவந்த துப்பாக்கியால் நித்துவை முனீஷ் சரமாரியாக சுட்டுள்ளார். தந்தை துப்பாக்கியால் சுட்டதில் நித்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், நித்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற முனீசை கைது செய்தனர். கணவனை கைவிட்டு காதலனுடன் சென்றதால் மகளை கொலை செய்ததாக முனீஸ் போலீசில் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.