திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கீழில்லம் பகுதியை சேர்ந்தவர் லைஜு. இவருக்கு திருமணமாகி ஜிபிமொல் (வயது 37) என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் இருந்தனர். லைஜு அப்பகுதியில் உணவகம் வைத்து தொழில் செய்து வந்தார்.
இதனிடையே, மனைவி ஜிபிமொலின் நடத்தையில் லைஜுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், லைஜுவுக்கு ஜிபிமொலுக்கும் இடையே நேற்று மதியம் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த லைஜு மனைவி ஜிபிமொலை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய லைஜு பைக்கில் கீழில்லம் பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வந்த அரசு பஸ் மீது பைக்கை மோதி லைஜு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பஸ் மீது பைக்கை மோதியதில் படுகாயமடைந்த லைஜு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை, லைஜுவின் இரு பிள்ளைகளும் வீட்டில் உள்ள அறையை திறந்து பார்த்துள்ளனர். அங்கு தனது தாயார் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பிள்ளைகள் உடனடியாக அண்டை வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், அண்டை வீட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து சென்ற போலீசார், லைஜுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.