கவுகாத்தி,
அசாமில் சிறுத்தையை புகைப்படம் எடுக்க முயன்ற போது சிறுத்தை தாக்கியதில் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
அசாம் மாநிலம் திப்ருகரில் உள்ள கர்ஜன் தேயிலை தோட்டம் அருகே நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஆண் சிறுத்தை ஒன்று கர்ஜன் தேயிலை தோட்டம் அருகே சபுவா புறவழிச்சாலையில் உள்ள கல்வெட்டுக்குள் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்ததும், தகவல் பரவியதால், சிறுத்தையை பார்க்க ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர், தினசரி கூலித் தொழிலாளியாக வேலை செய்துவிட்டு, டகுகானாவில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அந்த இடத்தை அடைந்ததும், அந்த சிறுத்தையை புகைப்படம் எடுக்க ஆரம்பித்து, சிறுத்தைக்கு அருகில் சென்றுள்ளார்.
அந்த நபர் சிறுத்தையை மிக நெருக்கமாக சென்று புகைப்படம் எடுக்க முயன்றார். அப்போது திடீரென சிறுத்தை அவரை தாக்கி காயப்படுத்தியது. அதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, சிறுத்தை துரத்துவதால் மக்கள் பயந்து ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
இறுதியில், தின்சுகியா பகுதி வனத்துறையினர் வந்து சிறுத்தையை அமைதிப்படுத்தி, அதை எடுத்துச் சென்றனர். உடல்பரிசோதனைக்கு பின், சிறுத்தை வனப்பகுதியில் விடப்படும் என்று தெரிவித்தனர்.
வன அதிகாரி ஒருவர் கூறுகையில், அசாமில் மனித-விலங்கு மோதல் சம்பவங்கள் ஆபத்தான முறையில் அதிகரித்துள்ளன என்பதை சுட்டிக்காட்டினார். காடுகள் மற்றும் வனப்பகுதி சுருங்கி வருவதால், மனித - விலங்கு மோதல் சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன என்றார்.