திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2021-22-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசன் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. பிரசித்தி பெற்ற மண்டல பூஜை கடந்த மாதம் 26-ந் தேதி நடைபெற்று, நடை அடைக்கப்பட்டது.
மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து, 14-ந் தேதி புகழ்பெற்ற மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. அன்றையதினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகரஜோதியை கண்ட மன நிறைவோடு அய்யப்பனை தரிசனம் செய்தனர்.
நடப்பு சீசனை முன்னிட்டு இறுதி நெய்யாபிஷேகம் வழிபாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது. பந்தளம் அரச குடும்ப பிரதிநிதி இன்று (வியாழக்கிழமை) காலை சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். இதையொட்டி பக்தர்கள் நேற்றுடன் தரிசனம் முடித்துக்கொண்டு மலை இறங்க தொடங்கினர். காட்டுப்பாதையும் இரவு அடைக்கப்பட்டது.
இதற்கிடையே நேற்று முன்தினம் சபரிமலை சீசன் நிறைவாக பாரம்பரிய முறைப்படி சன்னிதானத்தில் இருந்து சரம் குத்திக்கு மாளிகப்புரத்தம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவையொட்டி, இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து பந்தளம் ராஜ குடும்பத்தின் பிரதிநிதி சங்கர் வர்மா சாமி தரிசனம் செய்வார். பின்னர் காலை 7 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
அதைத்தொடர்ந்து பந்தளம் ராஜகுடும்ப வாரிசு சங்கர் வர்மா தலைமையில் மீண்டும் திருவாபரணங்கள் பந்தளம் அரண்மனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும். மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 12-ந்தேதி திறக்கப்பட்டு, 17-ந்தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.