தேசிய செய்திகள்

வளர்ச்சி அடைந்த இந்தியா - கனவை மெய்ப்பிக்க தொழிலாளர் வளம் பெரும் பங்கு வகிக்கும்: பிரதமர் மோடி

வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை மெய்ப்பிக்க நாட்டில் தொழிலாளர் வளம் பெரிய பங்கு வகிக்கிறது என பிரதமர் மோடி இன்று பேசியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் சுதந்திர தின உரையின்போது, 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே மிக பெரிய தீர்மானம் என்று பிரதமர் மோடி மக்களிடையே கூறினார்.

இந்த நிலையில், நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் துறை மந்திரிகள் கலந்து கொள்ளும் தேசிய தொழிலாளர் மாநாடு இன்று நடந்தது. இதில், பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, பிரதம மந்திரி ஷ்ரம்-யோகி மாந்தன் யோஜனா, பிரதம மந்திரி சுரக்சா பீமா யோஜனா, பிரதம மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா போன்ற பல முயற்சிகள் தொழிலாளர்களுக்கு ஒரு வகை பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி தந்துள்ளது.

வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான நம்முடைய கனவு மற்றும் நோக்கங்களை உண்மையாக செய்வதில் இந்தியாவின் தொழிலாளர் வளம் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது. இந்த எண்ணத்துடன், அமைப்பு மற்றும் அமைப்பற்ற பிரிவில் பணியாற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்காக நாடு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என கூறியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்து, இந்தியா மீண்டும் இன்று உலகில் மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் நாடாக மாறியுள்ளது. நம்முடைய தொழிலாளர்களுக்கே இதன் எண்ணற்ற பாராட்டுகள் சென்று சேரும் என்றும் அவர் பேசியுள்ளார்.