புதுடெல்லி,
மராட்டிய மாநிலம் கோரேகான்-பீமா கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் டெல்லியில் பிடிபட்ட ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தின் மூலம் பிரதமர் மோடியை, மாவோயிஸ்டுகள் கொல்ல சதித்திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்தது.
அந்த கடிதத்தின் அடிப்படையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் வக்கீலும், மனித உரிமை செயற்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், மாவோயிஸ்டு ஆதரவாளர்களான கவுதம் நவ்லகா, வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா, கவிஞர் வரவரராவ் ஆகியோரை கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி புனே போலீசார் கைது செய்தனர். இவர்களை வீட்டுக்காவலில் வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில், 5 பேரை விடுவிக்கக் கோரியும், சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரியும் வரலாற்று ஆசிரியர் ரோமிலா தாபர் உள்ளிட்ட 5 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், கைதான வர்களின் வீட்டுக்காவலை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் பெரும்பான்மைக்கு மாறாக, 3-வது நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழங்கி உள்ள தீர்ப்பில், அரசாங்கத்தின் எதிர் கருத்துகளை ஒடுக்குவதற்காக 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவினரால் விசாரிப்பதற்கு சகல வகைகளிலும் தகுதி பெற்றது. சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளார்.