பிஜாப்பூர்,
சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தின் பொண்டும் கிராமத்தை சேர்ந்தவர் சன்னு புனெம். போலீஸ்காரரான இவர் சங்கலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இவர் விடுப்பு எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். மாலையில் அங்கு வந்த நக்சலைட்டுகள் சிலர், போலீஸ்காரர் சன்னு புனெத்தை கடத்தி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை தேடி வந்தனர்.
ஆனால் நேற்று காலையில் அருகில் உள்ள கேஷ்குதுல் கிராமத்தில் ஒரு சிற்றாறு அருகே சன்னு புனெம் பிணமாக கிடந்தார். அவரை கூர்மையான ஆயுதங்களால் நக்சலைட்டுகள் கொலை செய்துவிட்டு அங்கே போட்டு சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
அதேநேரம் போலீஸ்காரர் சன்னு புனெத்தை கடத்தி கொலை செய்த நக்சலைட்டுகளை தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.