மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடந்து வரும் மராத்தா சமுதாயத்தினரின் தீவிர போராட்டம் வன்முறை களமாக மாறியுள்ளது. தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் போராட்டம் மீண்டும் தொடங்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மராட்டிய மாநில அரசு, மத்திய படைகளின் உதவியை நாடியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மராட்டிய மாநில உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் பேசுகையில், புதியதாக வன்முறைகள் வெடிக்கலாம் என எங்களுக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளது. பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெறும் சூழ்நிலையில் மாநில போலீஸ் போதுமானதாக இருக்காது. எனவே வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் கூடுதல் படைகளை அனுப்ப மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம், என கூறிஉள்ளார். இதற்கிடையே மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார்.