தானே,
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் ரவீந்திரா(வயது37). இவர் ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் பெண்களை தொடர்பு கொண்டு. அவர்களை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். கடந்த மாதம் தானேயை சேர்ந்த பெண் ஒருவர். காசர்வடவிலி போலீஸ் நிலையத்தில் சுரேஷ் ரவீந்திரா மீது புகார் ஒன்றை அளித்தார். அதில், 'ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலம் அறிமுகமான சுரேஷ் ரவீந்திரா.
ஆசைவார்த்தை கூறி கோவிலில் வைத்து என்னை திருமணம் செய்துகொண்டார். பின்னர், ஆஸ்திரேலியா அல்லது ரஷியாவில் வேலை வாங்கித்தருவதாக நம்பவைத்து என்னிடம் ரூ.48 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டார்’ என கூறியிருந்தார்.
இந்த நிலையில் ரஷியாவில் இருந்து டெல்லி விமான நிலையம் திரும்பிய சுரேஷ் ரவீந்திராவை அங்குள்ள குடியுரிமை அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர். டெல்லி விரைந்த தானே தனிப்படை போலீசார், அவரை கைது செய்து தானே அழைத்து வந்து விசாரித்து வருகிறார்கள்.
விசாரணையில், இந்த மோசடி வாலிபர் இதேபோல தெலுங்கானாவில் ஒரு பெண்ணை திருமணம் செய்து ரூ.15 லட்சமும், அவரது நண்பர்களுக்கு ஐரோப்பாவில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.18 லட்சமும் மோசடி செய்தது தெரியவந்தது.
மேலும், விசாகப்பட்டினத்தில் ஒரு பெண்ணிடம் ரூ.9 லட்சம் சுருட் டியதும், அடுத்ததாக மற்றொரு பெண்ணை ஏமாற்ற திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்களிடம் இவர் மொத்தம் ரூ.90 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக காசர்வடவலி போலீசார் தெரிவித்தனர்.