அரியானா மாநிலம் சிர்ஸாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேரா சச்சா சவுதாவுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் 46 கிளை ஆசிரமங்கள் உள்ளன. அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், 2 பெண் துறவிகளை பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ரோத்தக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பகட்டான உடைகள், விலை உயர்ந்த நகைகள், ஆடம்பர கார்கள், பக்தர் பட்டாளம் என குறுநில மன்னர் போல வாழ்ந்த அவர் தற்போது சிறையில் நாளொன்றுக்கு ரூ.20 ஊதியத்தில் வேலை செய்கிறார். 900 சதுர அடி நிலத்தை அவர் உழுது வைத்துள்ளார். சிறையில் தினசரி 8 மணி நேரம் அவர் வேலை செய்கிறார். அவர் பயிரிடும் காய்கறிகள் சிறைக் கைதிகளின் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிர்சாவில் உள்ள தேரா சச்சா தலைமை ஆசிரமத்திற்குள் என்ன தான் நடக்கிறது என்பது பற்றி அரியானா போலீஸ் குழு விசாரணை நடத்தி வருகிறது.குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் சிர்சா ஆசிரமம் 800 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அங்கு 7 நட்சத்திர ஓட்டல் மற்றும் ஈபிள் டவர், தாஜ்மஹால், டிஸ்னி பேலஸ் ஆகியவற்றின் மாதிரி கட்டிடங்கள் அங்கு உள்ளன. அவரது சொத்து மதிப்பு ரூ.1,000 கோடிக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரம தலைமையகத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் அடுத்தகட்டமாக அங்கு சோதனையும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் குர்மித்தின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் தேரா துணைத் தலைவர் தேரா சச்சா சவுதா டாக்டர் பி.ஆர் நெய்னிடம் நடத்திய விசாரணையில் ஆசிரமத்தில் 600 எலும்புக் கூடுகள் புதைத்து இருப்பதாக கூறினார் . ஒரு ஜெர்மன் விஞ்ஞானி ஆலோசனையின்பேரில் புதைக்கபட்டு உள்ளது.
இவர்கள் அனைவரும் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் மோட்சம் அளிப்பதாக கூறியும் சிலர் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் 600 எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதையும் போலீசார் வெளியிடவில்லை. அதேசமயம், தலைமறைவாக உள்ள ராம் ரஹீமின் வளர்ப்பு மகளான ஹனிப்ரீத் எங்கிருக்கிறார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அவர் நேபாளத்திற்கு தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் நேபாள போலீசாரின் உதவியுடன், அரியானா போலீஸ் குழு விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.