பாட்னா,
பீகார் மாநிலத்தில் அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.எம். கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் நேற்று ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்தனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் கூறுகையில், கடந்த சட்டசபை தேர்தலில் 75 இடங்களில் வென்ற ராஷ்டிரீய ஜனதா தளம், சட்டசபையில் தனிப்பெரும் கட்சி ஆனது.
ஆனால் கடந்த மார்ச்சில் விகாஷீல் இன்சான் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் இணைந்ததால் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 74-ல் இருந்து 77 ஆனது.
இந்நிலையில் இடைத்தேர்தல் ஒன்றில் வென்ற ராஷ்டிரீய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 75-ல் இருந்து 76 ஆக உயர்ந்தது.
தற்போது ஏ.ஐ.எம்.எம். கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் இணைந்துள்ள நிலையில் 80 எம்.எல்.ஏ.க்களுடன் ராஷ்டிரீய ஜனதா தளம் மீண்டும் தனிப்பெரும் கட்சியாக ஆகியுள்ளது என்றார்.
ராஷ்டிரீய ஜனதா தளத்தில் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களும் ஏ.ஐ.எம்.எம். கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். தங்கள் முடிவை சபாநாயகருக்கும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பீகாரில் கடந்த சட்டசபை தேர்தலில் 5 தொகுதிகளில் வென்று ஆச்சரியப்படவைத்த ஓவைசியின் கட்சியில் தற்போது ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டும் எஞ்சியுள்ளார்.