பெங்களூரு,
கர்நாடகத்தில் வருகிற 2023-24-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் 2 மடங்காக அதிகரிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விவசாயத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை பெங்களூருவில் நேற்று நடத்தினார். இதில் தேசிய மழை ஆதார பகுதி ஆணைய தலைமை செயல் அதிகாரியும், மத்திய அரசின் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக ஆக்கும் திட்டத்தின் அதிகார குழு தலைவருமான அசோக் தால்வய் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரிப்பது தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் எப்படி திட்டங்களை செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க கர்நாடக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகிற 2023-24-ம் ஆண்டுக்குள் கர்நாடகத்தில் விவசாயிகளின் வருவாயை இரண்டு மடங்காக அதிகரித்து இந்த விஷயத்தில் கர்நாடகம் முதல் மாநிலம் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்.
விவசாயிகளின் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். இந்த விஷயத்தில் கர்நாடகத்துடன் கைகோர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது. நாங்கள் விவசாயிகள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க உள்ளோம். அந்த குழு மத்திய அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும். கர்நாடகத்தில் அமல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து தனியாக ஒரு அறிக்கை தயாரித்து, அதை செயல்படுத்துவோம்.
விவசாய பல்கலைக்கழகங்கள் உதவியுடன் விதைகள், பூச்சி கொல்லி மருந்துகள், உரம் ஆகியவற்றை நிர்வகிக்கவும், மண் வளத்தை மேம்படுத்தவும் விவசாயத்துறை மந்திரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும். உணவு தானியங்கள் மற்றும் விவசாயம், தோட்டக்கலை, பட்டு, கால்நடை, பால் பண்ணை, மீன் உற்பத்தி பொருட்களை பதப்படுத்தம் பணிக்காக ஒரு சிறப்பு செயல்படை உருவாக்கப்படும். இது விவசாய துணை இயக்குனரகம் என்று அழைக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.