தேசிய செய்திகள்

அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை

கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ உபகரணங்கள் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்துள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்டவற்றிற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், பல உலக நாடுகள் இந்தியாவிற்கு நேசக்கரம் நீட்டி வருகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு சர்வதேச நாடுகள், எல்லைகளைக் கடந்து இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதாக உறுதியளித்தார். அமெரிக்காவில் கொரோனா பேரிடரின் தொடக்க காலத்தில் இந்தியா உதவி செய்தது போல, இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும் என ஜோ பைடன் தெரிவித்திருந்தார். அந்த வகையில் ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று அமெரிக்காவில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் இரண்டு விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்கா பாதுகாப்பு துறை அமைச்சர் ஆஸ்டின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆக்சிஜன் சிலிண்டர்கள், கொரோனா பரிசோதனை கருவிகள், என்-95 மாஸ்க்குகள் மற்றும் பல்ஸி ஆக்சிமீட்டர்களுடன் இரண்டு ராணுவ விமானங்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும் 15 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவினை அளிக்கும் 9.6 லட்சம் கருவிகள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும், ஒரு லட்சம் என்-95 மாஸ்க்குகள் இருப்பதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதே போல ரஷ்யாவில் இருந்து 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 75 வென்ட்டிலேட்டர்கள் உள்ளிட்ட 22 மெட்ரிக் டன் பொருட்களுடன் 2 விமானங்கள் இந்தியா வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை