சண்டிகர்,
சமீபத்தில் துபாயில் இ்ந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. அதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில், பாகிஸ்தான் அணி வெற்றிக்கு ஆதரவாக காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் கோஷமிட்டதாகவும், அவர்களுடன் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவர்கள் சண்டையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில், பாகிஸ்தான் அணி வெற்றியை கொண்டாடுபவர்கள் பற்றி அரியானா மாநில மந்திரி அனில் விஜ், சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அரியானா மாநிலத்தில் நடக்கும் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜனதா அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக அனில் விஜ் இருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கிரிக்கெட் பந்தயத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்காக இந்தியாவில் பட்டாசு வெடிப்பவர்களின் மரபணு, நிச்சயமாக இந்தியனாக இருக்க முடியாது. நமது நாட்டிலேயே மறைந்து இருக்கும் துரோகிகள் விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடியதற்காக ஸ்ரீநகரில் மருத்துவ மாணவர்கள் மீது காஷ்மீர் போலீசார் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் (உபா) 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும், சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடிய 6 பேர் பிடிபட்டனர். அவர்கள் ஆட்சேபகரமான கோஷங்களையும் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, 6 பேர் மட்டும் பிடிபட்டாலும், மேலும் பலர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.