பிரயாக்ராஜ்,
இந்து காலண்டரில் வரும் மாசி மாதத்தின் பவுர்ணமி நாள் மகா பூர்ணிமா (மாகி பூர்ணிமா) என அழைக்கப்படுகிறது. இதை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் 45 நாட்கள் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி மகாமேளா எனவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது கும்பமேளா எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதை இந்துக்கள் மிகவும் சிறப்பாக கருதுகின்றனர். எனவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜில் குவிந்து வருகின்றனர்.
விழாக்கோலம் பூண்டது
இந்த ஆண்டும் மகா மேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் திரிவேணி சங்கமத்தில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வந்தனர். இதனால் பிரயாக்ராஜ் நகரமே கடந்த சில வாரங்களாக களை கட்டியிருந்தது.
இந்த மகா மேளாவின் நிறைவு நாளான நேற்று உத்தரபிரதேசம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாதுக்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுத்தனர். அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி சிறப்பு வழிபாடுகளை செய்தனர். இதனால பிரயாக்ராஜ் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
ஹெலிகாப்டர் மூலம்மலர் தூவப்பட்டன
இந்த விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் புனித நீராடிய பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்பட்டன. உத்தரபிரதேச அரசின் இந்த இனிமையான செயலால் பக்தர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். அவர்கள் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இதற்கிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரயாக்ராஜில் பலத்த முன்னெச்சரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. மகா மேளா தொடங்கியது முதலே லட்சக்கணக்கான பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தூய்மை நடவடிக்கைகள்
மேலும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் குடிநீர், சுகாதாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய மாநில அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. மேலும் நோய் அச்சுறுத்தல் இன்றி பக்தர்கள் புனித நீராடுவதற்காக திரிவேணி சங்கமத்தில் தூய்மை நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தன.
குறிப்பாக பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹரித்வாரில் குவிந்த பக்தர்கள்
இதைப்போல உத்தரகாண்டின் ஹரித்வாரிலும் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடினர். இதற்காக நேற்று முன்தினமே அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். புனித நீராடிய பக்தர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும், கொரோனா தொற்றில் இருந்து உலகம் விடுபடவும் சிறப்பு வழிபாடுகள் நடத்தியதாக தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி ஹரித்வாரிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.