புதுடெல்லி,
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ரஷியாவுக்கு அரசு முறைப்பயணமாக செல்கிறார். அங்கு அவர் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில், எதிரிகளின் ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் ஏவுகணைகளை வாங்கும் பேரத்தை முடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா விருப்பம்
ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கு பலத்த போட்டியாக சீனா உள்ளது. இந்தியா-சீனா இடையிலான 4 ஆயிரம் கி.மீ. எல்லையை தனது ராணுவத்தை கொண்டு சீனா தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியா தனது வான்பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரப்படுத்த விருப்பம் கொண்டு உள்ளது. இதற்காக தொலைதூர ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கு திட்டமிட்டு உள்ளது.
ரூ.40 ஆயிரம் கோடி
இதற்காக சுமார் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் எஸ்.400- டிரையம்ப் வழிமறிப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்தியாவும், ரஷியாவும் 2016-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டன.
இந்த வழிமறிப்பு ஏவுகணைகளை பொறுத்தமட்டில், அவை எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஆளில்லாத விமானங்கள் ஆகியவற்றை 400 கி.மீ. தொலைவில் வழிமறித்து அழிக்கிற ஆற்றல் கொண்டவை.
இது ரஷியாவின் அதிநவீன தொலைதூர ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஆகும்.
விலையில் பிரச்சினை
இந்த அதிநவீன வழிமறித்து தாக்கும் தொலைதூர பாதுகாப்பு ஏவுகணைகளை ரஷியாவிடம் இருந்து வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்ட முதல் வெளிநாடு என்ற பெயரை சீனா தட்டிச்சென்று உள்ளது. சீனா 2014-ம் ஆண்டில் இதற்கு ஒப்பந்தம் போட்டு உள்ளது. ஆனால் எத்தனை ஏவுகணைகளை வாங்குகிறது என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் இவற்றை தயாரித்து ரஷியா வழங்கத் தொடங்கிவிட்டது.
ஆனால் இந்தியா, இந்த வழிமறிப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கான பேரத்தை இறுதி செய்வதில் விலை ஒரு பிரச்சினையாக உள்ளது.
நிர்மலா சீதாராமன் நடவடிக்கை
இந்த நிலையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், விரைவில் ரஷியாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதுபற்றி தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறும்போது, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 6 வாரங்களில் ரஷியாவுக்கு போகிறார். அப்போது அவர் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள எஸ்.400- டிரையம்ப் வழிமறிப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கான பேரத்தை முடித்து விடுவார் என தெரிவித்தன.
ஐந்து எஸ்.400- டிரையம்ப் வழிமறிப்பு ஏவுகணைகள் வாங்குவது தொடர்பாக கடந்த 1 ஆண்டுகளாக இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 3 விதமான ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தக்கூடியவையாக அவை அமையும் என தகவல்கள் கூறுகின்றன.