புதுடெல்லி,
பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாகச் சீண்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளானதை #மீ டூ ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும்ன் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமாக இருந்த எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகார்களைத் தெரிவித்துள்ளனர். அதில் மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப், உள்ளிட்ட பலர் அடங்குவர்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எம்.ஜே அக்பரை விமர்சித்தன. அக்பர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கும் கடும் நெருக்கடியும், தர்மசங்கடமான நிலையும் ஏற்பட்டது. இதையடுத்து, எம்.ஜே அக்பர் இணை அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
இதற்கிடையில், பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவதூறு வழக்கு எம்.ஜே.அக்பர் தொடுத்தார். இந்த அவதூறு வழக்கின் விசாரணை டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. எம்.ஜே அக்பர் மீதான வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் அக்.31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அன்றைய தினம், எம்.ஜே அக்பர் உள்ளிட்டோர் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.