மீடூ பிரசாரம் மூலம் சமூக வலைதளங்களில் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் பாலியல் தொல்லை புகாரை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பிய எம்.ஜே. அக்பர் விளக்கமளித்துள்ளார். பாலியல் புகார்கள் அனைத்தையும் நிராகரித்துள்ள அவர் சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்கப்போவதாக மிரட்டியுள்ளார்.
வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் பொய்யானவை மற்றும் ஜோடிக்கப்பட்டது. இந்த பொய்யான, அடிப்படையற்ற மற்றும் காட்டுத்தனமான குற்றச்சாட்டுக்கள் என்னுடைய நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தை என்னுடைய வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்வார்கள், என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேலையில் இந்த புயல் எழும்பியுள்ளது தொடர்பாக கேள்வியை எழுப்பியுள்ளார் எம்.ஜே. அக்பர். இந்த சம்பவத்தினால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யப்போவது கிடையாது என தெரிவித்துள்ளார். எம்.ஜே. அக்பருக்கு எதிராக புகார்களை தெரிவித்து வரும் பெண்கள் அனைவரும் பத்திரிக்கையாளர்கள்தான், அவருடைய அலுவலகத்தில் எவ்வாறெல்லாம் தவறாக நடந்துக்கொண்டார் என பட்டியலிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் பெரும் புயலாக மீடூ மாறியுள்ள நிலையில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பதை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லா விஷயம் தொடர்பாகவும் பேசும் பிரதமர், இப்போது மீடூ தொடர்பாக அமைதியாக இருக்கிறார். அவருடைய அமைதியானது, பிரதமர் அலுவலகத்தின் மாண்பு மீது கேள்வியை எழுப்புகிறது. அவருடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று தேசம் காத்திருக்கிறது, என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் எம்.ஜே. அக்பரின் அறிக்கையை நிராகரித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, ஏன் பா.ஜனதா தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை? என கேள்வியை எழுப்பியுள்ளார். 12-க்கும் அதிகமான பெண்கள் பாலியல் தொல்லை தொடர்பான அனுபவங்களை தெரிவித்துவரும் நிலையில் இதனை எப்படி அரசியல் சதியாக கூறமுடியும்? அவர் பதவி விலகுவதால் எந்தஒரு தொகுதியால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது? அரசு பாலியல் வன்முறையாளர்களை பாதுகாக்கிறது, ஊக்குவிக்கிறது என்பதுதான் தெளிவாக தெரிகிறது, என்று விமர்சனம் செய்துள்ளார். எம்.ஜே. அக்பர் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.