புதுச்சேரி,
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் த.வெ.க. திணறி வரும் நிலையில், தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பமாக தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது தொடர்பாக அக்கட்சிகளின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும் இதுதொடர்பாக இரு கட்சிகளும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இன்று காலை இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.
புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஸ்டாலின் எல்லாம் எவ்வளவு பெரிய தலைவர் எனக் கூறி திமுக தலைவர் ஸ்டாலினின் தோல்விக்கு வருந்தினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சென்னையில் வெயில் அதிமாக உள்ளதால் அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி வருகை தந்துள்ளனர்.
விடுதியில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை சந்திக்க ஈபிஎஸ் வருவார். அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதிமுக ஒரு கோட்டை. இதில் எந்த ஓட்டையும் இல்லை. அதிமுக எம்.எல்.ஏக்களை எடப்பாடி பழனிசாமி கடலில் குதிக்க சொன்னால்கூட அவர்கள் குதிப்பார்கள் என்றார்.