தேசிய செய்திகள்

‘மோடியின் ஆட்சியில் ஊழலின் வேர்கள் வலுவாக ஊன்றியுள்ளன’ சோனியா காந்தி விமர்சனம்

‘மோடியின் ஆட்சியில் ஊழலின் வேர்கள் வலுவாக ஊன்றியுள்ளன’ என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்தார். #JanAakrosh #SoniaGandhi

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி சார்பில் ஜன் ஆக்ரோஷ் (மக்களின் கோபம்) என்ற பெயரில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நடைபெற உள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்த இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தை கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்கி வழிநடத்தினார். இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடியின் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

சோனியா காந்தி பேசுகையில், மோடியின் ஆட்சியில் ஊழலின் வேர்கள் வலுவாக ஊன்றியுள்ளன. நானும் ஊழலில் ஈடுபடமாட்டேன், மற்றவர்களையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்ற பிரதமரின் கோஷம் என்னாச்சு? என்று கேள்வி எழுப்பினார்.

மோடியின் ஆட்சியில் நாட்டின் நீதித்துறை வரலாறு காணாத வகையில் நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், ஊடகங்கள் தங்கள் பணியை செய்ய முடியவில்லை என்றும் குற்றம் சாட்டிய அவர், இந்த விவகாரங்களில் மக்களின் சார்பில் நாங்கள் போராடுவோம் என்றும் கூறினார்.

சமூதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் மோடியின் அரசின் மீது அதிருப்தியில் உள்ளதாகவும், கோபத்தில் உள்ளதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டார். சிறுமிகளையும், பெண்களையும் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை பாரதீய ஜனதா அரசு பாதுகாக்கிறது. பிரதமர் மோடி, இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இன்றுவரையில் நிறைவேற்றப்படவில்லை. இளைஞர்கள் வேலையின்மையால் துன்பப்பட்டு வருகின்றனர். பிரதமர் மோடி இளைஞர்களுக்கு துரோகம் செய்துவிட்டார். பாரதீய ஜனதா ஆட்சியில் பொய்களும், நேர்மையின்மையும்தான் நிறைந்து இருக்கிறது.

யாரெல்லாம் அரசின் சீர்கேடுகளை எதிர்த்து குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் நசுக்கப்படுகிறார்கள் எனவும் விமர்சனம் செய்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது