தேசிய செய்திகள்

மாணவர்களின் எதிர்காலத்தில் மோடிக்கு அக்கறை இல்லை- ராகுல்காந்தி தாக்கு

மாணவர்களின் எதிர்காலத்தை விட, உங்களது ஆட்சியை காப்பாற்றுவதில் தான் அக்கறையாக இருக்கிறீர்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகளில் புதிய டிஜிட்டல் திருத்துமுறையால் மதிப்பெண் குறைபாடுகளும், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதில் இணையதள சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடி உள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் இளைஞர்கள் உண்மையை அறிந்துகொள்ள தகுதியானவர்கள். எனவே, சி.பி.எஸ்.இ.-யின் ஆன் ஸ்கிரீன் மதிப்பீட்டு முறை மற்றும் 'கோயம்ட்' நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட் டது குறித்து, முதல்நாளில் இருந்தே சுதந்திரமான நீதி விசாரணை நடத்த வேண்டும் என நான் வலியுறுத்தி வருகிறேன். விதிமுறைகளை வளைத்து, ஒரு நிறுவனத்திடம் 18.5 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேள்வி எழுப்பும் என்னை தாக்கும் பா.ஜனதா மந்திரிகளுக்கு நான் கூறுவது ஒன்றுதான். சி.பி.எஸ்.இ. மட்டுமின்றி, 'கோயம்ட்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்கள் குறித்தும் சுதந்திரமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். மோடி அவர்களே, இந்த சி.பி.எஸ்.இ விவகாரத்தில் உங்களது மவுனமும், கல்வி மந்திரி மீதான உங்களது மெத்தனப் போக்கும், உங்களுக்கு லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை விட, உங்களது ஆட்சியை காப்பாற்றுவதில் தான் அக்கறையாக இருக்கிறீர்கள் என்பதை நாட்டிற்கு உணர்த்துகிறது. இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.