தேசிய செய்திகள்

உடல்நிலை சரி இல்லாததால் மந்திரி பதவியை மறுத்த அருண் ஜெட்லியுடன் மோடி சந்திப்பு

உடல்நிலை சரி இல்லாததால், மீண்டும் மந்திரி ஆக விரும்பவில்லை என்று கடிதம் எழுதிய அருண் ஜெட்லியை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி இன்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். அவருடன் மந்திரிகள் சிலரும் பதவி ஏற்க உள்ளனர். யார் யாருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று யூகமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகால மோடி அரசில், நிதி மந்திரியாக இருந்த அருண் ஜெட்லி, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே, அவர் மந்திரி பதவியை ஏற்பாரா? என்பது பற்றி முரண்பாடான தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகையில், மீண்டும் மந்திரி பதவி வேண்டாம் என்று அருண் ஜெட்லியே கூறியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் 4 பக்க கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 18 மாதங்களாக, நான் கடுமையான உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறேன். அவற்றில் பெரும்பாலானவற்றில் இருந்து மீண்டு வர டாக்டர்கள் துணை புரிந்துள்ளனர். தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு, நீங்கள் (மோடி) கேதார்நாத்துக்கு புறப்பட்டீர்கள். அப்போது, தேர்தல் பிரசாரத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றியபோதிலும், வருங்காலத்தில் எந்த பொறுப்பையும் ஏற்காமல் ஒதுங்கி இருக்க விரும்புவதாக தங்களிடம் வாய்மொழியாக தெரிவித்தேன். அதன்மூலம் எனது உடல்நலத்திலும், சிகிச்சையிலும் கவனம் செலுத்த முடியும்.

என்னையும், எனது உடல்நிலையையும் கவனித்துக் கொள்ள எனக்கு போதிய நேரம் அளிக்குமாறு முறைப்படி தெரிவிக்கவே இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஆகவே, புதிய அரசில் தற்போதைக்கு மந்திரி பதவியை ஏற்க நான் விரும்பவில்லை.

கடந்த 5 ஆண்டுகால மோடி அரசில் நான் இடம்பெற்றது மிகவும் கவுரவமானதாகவும், அனுபவங்களை கற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருந்தது. அரசுக்கும், கட்சிக்கும் அதிகாரபூர்வமற்ற முறையில் ஆதரவாக இருப்பேன். இவ்வாறு அருண் ஜெட்லி கூறி உள்ளார்.

இந்த கடிதத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, அருண் ஜெட்லியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அருண் ஜெட்லியிடம் அவரது உடல் நலம் குறித்து விசாரித்த மோடி, அவரது கடித விவரம் குறித்தும் பேசினார்.

அப்போது, மந்திரி சபையில் சேருவது இல்லை என்ற முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அருண் ஜெட்லியை அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

66 வயதான மத்திய மந்திரி அருண் ஜெட்லி, தொழில்ரீதியாக ஒரு வக்கீல் ஆவார். தனது 47-வது வயதில், குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். வாஜ்பாய் அரசில் மத்திய மந்திரியாக இருந்தார். 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருப்பினும், நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டார். மோடி அரசுக்கு ஏற்படும் சிக்கல்களை களைபவராக இருந்தார். ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், நீரிழிவு நோயால் உடல் எடை அதிகரித்ததால், எடை குறைப்பு ஆபரேஷன் செய்து கொண்டார். கடந்த ஆண்டு மே 14-ந் தேதி, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்து கொண்டார். அப்போது, இடைக்கால நிதி மந்திரியாக பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஜனவரி 22-ந் தேதி, அருண் ஜெட்லிக்கு அமெரிக்காவில் ஆபரேஷன் நடந்தது. இதனால், மோடி அரசின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வாய்ப்பு, அவருக்கு கிடைக்கவில்லை. பிப்ரவரி 9-ந் தேதி நாடு திரும்பினார். கடந்த மாதம், பன்னாட்டு நிதியம்-உலக வங்கி குழும கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றபோது, மருத்துவ சிகிச்சை பெற்றார்.

கடந்த வாரம், டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சில பரிசோதனைகளும், சிகிச்சைகளும் எடுத்துக் கொண்டார். தேர்தல் முடிவுகள் வெளியான 23-ந் தேதி வீடு திரும்பினார். ஆனாலும், அன்று மாலை பா.ஜனதா தலைமையகத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

அதைத்தொடர்ந்து, புதிய அரசில் மந்திரி பதவி வேண்டாம் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது