தேசிய செய்திகள்

இத்தாலி பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா வந்துள்ள இத்தாலி பிரதமருடன் நரேந்திர மோடி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

புதுடெல்லி,

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலிக்கும், இந்தியாவுக்கும் இடையே சிறந்த உறவுகள் இருந்து வந்தது. குறிப்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் இந்தியாவின் 5வது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இத்தாலி விளங்கி வருகிறது.

கடந்த 2012ம் ஆண்டு கேரள கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த இந்திய மீனவர்களை இத்தாலிய கடற்படையினர் சுட்டுக்கொன்றதால், 2 வீரர்களை இந்தியா கைது செய்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது.

தற்போது இரு நாடுகள் இடையிலான உறவு மேம்பட்டு வரும் நிலையில், இத்தாலி பிரதமர் பவுலோ ஜென்டிலோனி நேற்று அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். டெல்லி வந்த அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகளை கடந்து இருதரப்பு அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் முடிவில் இரு நாடுகளுக்கு இடையே ரெயில்வே பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பரஸ்பர முதலீடுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன.

பின்னர் பிரதமர் மோடி மற்றும் பவுலோ ஜென்டிலோனி இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறுகையில், இந்தியாஇத்தாலி இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கு மிகப்பெரிய சாத்தியம் இருப்பதாக கூறினார்.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் தீவிரவாதம், சைபர் குற்றங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மோடி தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஜென்டிலோனி, இரு நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக தனது பயணம் அமைந்ததாக மகிழ்ச்சி வெளியிட்டார். 10 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இத்தாலி பிரதமர் ஜென்டிலோனி என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

முன்னதாக அவரை மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்து இருதரப்பு நலன்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு