தேசிய செய்திகள்

மோடி– கனடா பிரதமர் 2 மணி நேரம் பேச்சு 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடியும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர். 2 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையின் போது இரு தலைவர்களின் முன்னிலையிலும் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா வந்த அவர் பல்வேறு மாநிலங்களிலும் தனது பயணத்தை முடித்து விட்டு நேற்று முன்தினம் டெல்லி வந்தார்.

இந்தியாவில் தனி நாடு கோரிக்கை எழுப்பி வரும் காலிஸ்தான் அமைப்பினர் மீது கனடா அரசாங்கம் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாகவும், டெல்லியில் உள்ள கனடா நாட்டு தூதரகம் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அளித்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காலிஸ்தான் அமைப்பின் தண்டனை பெற்ற பயங்கரவாதி ஜஸ்பால் அத்வாலுக்கு அழைப்பு விடுத்ததும் பின்னர் அந்த அழைப்பை ரத்து செய்ததும், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஜஸ்டின் ட்ரூடோவின் டெல்லி வருகை அமைந்திருந்தது.

நேற்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு தனது குடும்பத்தினருடன் வந்த அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. அப்போது ஜஸ்டின் ட்ரூடோவின் மகளிடம் இந்தியாவை சுற்றிப் பார்த்தது குறித்து மோடி கேட்டறிந்தார்.

இதன்பின்னர், பிரதமர் மோடியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்து பேசினார். 2 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. இரு நாடுகளும் பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விரிவாக விவாதித்தனர். இதன்பிறகு 2 தலைவர்களின் முன்னிலையிலும், இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் குழுவினர் வர்த்தக உறவு, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் உள்பட 6 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

இதைத்தொடர்ந்து மோடியும், ஜஸ்டின் ட்ரூடோவும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, மோடி கூறுகையில், நாங்கள் இருவரும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட ஒப்புக் கொண்டிருக்கிறோம் என்றார்.

மேலும், பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் நமது இருநாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது மிக முக்கியம் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, மதத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் இலக்குகளை அடைய நினைப்பவர்களுக்கும் பிரிவினைவாதம் கோருபவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. எனவே நாம் பயங்கரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது. ஏனென்றால் நமது இரு நாடுகளுக்குமே பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.

நமக்கு எதிராக சவால் விடுப்பவர்களையும், நமது நாடுகளின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு பங்கம் விளைக்கும் விதமாக செயல்பட முயற்சிப்பவர்களையும் பொறுத்துக் கொள்ளவும் கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கனடாவின் முதலீடு இந்தியாவில் இரட்டிப்பாகும் என்று தான் நம்புவதாகவும், இருநாடுகளின் சமூக பொருளாதார உறவை இன்னும் வலுப்படுத்துவோம் எனவும் மோடி குறிப்பிட்டார்.

கனடா பிரதமரும் அவருடைய குடும்பத்தினரும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்து இந்திய மக்களின் பன்முகத்தன்மையை மிகவும் அனுபவித்து ரசித்து இருப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, வர்த்தக ஒத்துழைப்பில் இந்தியா எங்களுக்கு இயற்கையான கூட்டாளியாக திகழ்கிறது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு