8-ம் தேதி தொடங்கிய தொடர் கனமழை காரணமாக கேரளா நீரில் மிதக்கிறது. மாநிலம் முழுவதும் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.
வெள்ளம், நிலச்சரிவு காரணமாக மாநிலம் முழுவதும் சாலை போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து மற்றும் வான் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் மக்கள் உயிரிழக்கும் சோகமான சம்பவம் நிகழ்ந்துக்கொண்டே உள்ளது. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளார்கள், மாநிலத்திற்கு பெரும் பொருளாதார இழப்பும் நேரிட்டுள்ளது. இதற்கிடையே திரிச்சூர் மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர், பத்தனம்திட்டாவில் மூன்று பேரது சடலம் எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு பாவூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் 80 சதவிதம் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், காசர்கோடு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலார்ட் திரும்பப் பெறப்பட்டது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.