பெங்களூரு,
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 8-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் போலாந்து, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்தியர்களை மீட்கும் பணியான 'ஆபரேஷன் கங்கா' திட்டத்தில் இந்திய விமானப்படையின் விமானங்களும் களமிறங்கியுள்ளன. இதற்காக விமானப்படையின் சி-17 விமானங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, பஸ், ரெயில் வசதி இல்லை என்றாலும் கூட கார்கிவில் இருந்து நடந்தாவது வெளியேறுமாறு இந்தியர்களுக்கு தூதரகம் நேற்று எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ககன் கவுடா என்ற மாணவர், உக்ரைனில் மருத்துவம் பயின்று வருகிறார். அவர் தங்கியிருக்கும் கார்கிவ் நகரில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், வெளியேற முடியாமல் தவித்து வருவதாக பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த மாணவனின் தாயார் தனது மகனை மீட்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார். ஆட்சியரை சந்தித்து மனு அளித்துவிட்டு வெளியே வந்தபோது அவர் திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.