பட்ஜெட் கூட்டத் தொடர் முன்னிட்டு கடந்த ஜனவரி 28ஆம் தேதி நாடாளுமன்றம் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனாதிபதி உரையுடன் அவை கூடியது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டு அமர்வில் ஜனாதிபதி உரையாற்றினார். 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடைபெற்று வந்தது.
மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்ற இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் அவைக்கு வரவில்லை. இதையடுத்து, பிரதமர் மோடியின் பதிலுரை இன்றி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் இன்று காலை நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பதிலுரையாற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், பிரதமர் மோடி தொடர்ந்து உரையாற்றினார். இதையடுத்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.